கோவில்கள்
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். அதிலும் கிராமங்கள் வழிபாட்டிற்கு பெரும் பங்காற்றுகின்றன. வழிபாட்டு தளங்கள் இல்லாத கிராமம் தமிழகத்தில் இல்லை எனவும் கூறலாம். அவ்வகையில் ஆலம்பள்ளம் கிராமத்தில் மொத்தம் 8 கோவில்கள் உள்ளன.
- விநாயகர் கோவில்
- முனீஸ்வரன் கோவில்
- மழை மாரியம்மன் கோவில்
- முத்து மாரியம்மன் கோவில்
- காளியம்மன் கோவில்
- பேச்சியம்மன் கோவில்
- அய்யனார் கோவில்
- காமாண்டி கோவில்
மேலும் கோவில்கள் பற்றிய செய்திகள் விரைவில்…
அருள்மிகு விநாயகர்(பிள்ளையார்) கோவில்
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான். ஆலம்பள்ளத்தின் பிள்ளையார் கோவில் வரலாற்றுச் சிறப்புடையது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆலம்பல்ல கிராமத்தின் வடக்குப் பகுதியில், முசிறி அருள்மிகு கைலாசநாதர் கோவில் செல்லும் வழியில் ஒரு குளக் கரையில் அமைக்கப்பட்டது. இதன் அடையாளமாக அந்த குளம் ‘பிள்ளையார் குளம்’ என அழைக்கப்படுகிறது.
ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆலம்பள்ளம் கிராமத்தில் பிராமிணர்கள் வசித்து வந்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த இடத்தில் பிள்ளையாருக்கும், அருள்மிகு முத்து மாரியம்மனுக்கும் பூஜை செய்து தரிசித்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த இடத்தை அக்ராஹாரம்(பிள்ளையார் குளம் அடுத்துள்ள இடம்) எனத் தற்ச்சமயம் அழைக்கப்படுகிறது. பின்னர் பிள்ளையாருக்குப் புதுக் கோவில் அமைப்பதன் காரணமாக இடம் மாற்றி அமைக்கப்பட்டது. தற்சமயம் பிள்ளையார், ஆலம்பள்ளம் பழைய பள்ளி அருகே எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
வருடந்தோறும் சித்திரைத் திங்கள் முதல் தேதி விநாயகருக்கு பொங்கல் வைத்து ஆலம்பள்ளம் கிராம மக்கள் வழிபடுவது சிறப்பாக இருக்கும். மேலும் ஆவணித் திங்கள் விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடித்து பூஜை செய்து வழிபடுவர். திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் இவ்விநாயகரிடம் அருள் பெற்ற பிறகே தங்கள் வீட்டில் காலடி வைப்பர். வருடந்தோறும் சித்திரைத் திங்கள் முதல் தேதி விநாயகருக்கு பொங்கல் வைத்து ஆலம்பள்ளம் கிராம மக்கள் வழிபடுவர். கார்த்திகை திருநாள் அன்று கன்னி பெண்கள் இந்த விநாயகருக்கு அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதுவும் சிறப்பு!!!
முனீஸ்வரன் கோவில்
முன்பொருகாலத்தில் உலகில் அறியாமை எங்கும் சூழ்ந்தது. பிரம்ம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென் திசை நோக்கிக் குருவாக அமர்ந்து அவர்களுக்கு ஞானத்தைப் போதித்தார். அதன் பின்னரே வேதங்களும் இதிகாசங்களும் தோன்றின. சிவபெருமானின் ஞான வடிவம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார் என்பது வரலாறு.
தமிழ்நாடெங்கிலும் மக்கள் முனீஸ்வரனை காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஒருகையில் சூலத்துடனும் பார்ப்பவர்கள் பிரமிக்கும் வகையில் மிகவும் கம்பீரமாகக் காட்சியளிப்பார்.
ஆலம்பள்ளம் முனீஸ்வரன்(முனியன்) கோவில் கிராமத்தின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் இந்த முனீஸ்வரனைக் குலதெய்வமாக வணங்குகின்றனர். மக்கள் தங்கள் பிள்ளைகளின் முதல் முடி காணிக்கை மற்றும் காதனி விழா போன்றவற்றை முனீஸ்வரன் சந்நிதானத்தில் நடத்துகின்றனர். இவ்விழாக்களின் போது கோவில் பூசாரி, பறை(தப்பு) முழங்க முனியனுக்கே உரிய ஆட்டம் ஆடி, அரிவாளின் மீது ஏறி நின்று மக்களுக்கு ஆசி வழங்குவார். அதுசமயம் முனியனுக்குப் பல்லயம்(படையல் உணவு) தயார் செய்யப்பட்டு படையலிடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். இதில் ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு முனியனுக்குப் படையலிட்டு அருள் பெறுவர்.
வார நாட்களில் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகியவை முனீஸ்வரனுக்கு உற்சவ நாட்களாகும். அந்நாட்களில் பல ஊர்களிலிருந்து மக்கள் இங்கு வந்து ஈஸ்வரனுக்கு மலர்மாலையிட்டு, அருள் வாக்கு பெற்றுச் செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இக்கோயில் மறுசீரமைக்கப் பெற்று காண்பவர் மனதை பரவசம் கொள்ளும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழாக்களின் போது, மக்கள் அமர்ந்து உண்ணுவதற்காக தனிக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மழை மாரியம்மன்
மாரியம்மன் துதி
மலை மகளான அருளரு வடிவாய்
கலை மகளான அன்புறு வடிவாய்
அலை மகளான திருவுரு வடிவாய்
இலகிடும் ஆலம்பள்ளம் மழை மாரியே போற்றி!
“சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை”
“சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்”
“வசுதேவர்&தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்& யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள்”
இவ்வாறு மாரியம்மனுக்குப் பல புராணக் கதைகள் உண்டு. அவதாரத்திற்கு ஏற்ப மாரியம்மன், காளியம்மன், நாடியம்மன், பேச்சியம்மன் என பல பரிமானகளில் இந்தியா முழுதும் காட்சி அளிக்கிறாள். ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு புராணக் கதைகள் சொல்லப்படுவது உண்டு.
வரலாறு
ஷ வருடம் 1970 களில் கிராமத்தில் சிலருக்கு அம்மை கொண்டிருந்தது. அச்சமயம் சில வயதானவர்களுக்கும்,பெண்களுக்கும் கனவில் ஒரு தேவதைபோல் அருள்மிகு ஶ்ரீ மழை மாரியம்மன் அருள் பாலித்தாள். கிராமத்தின் சில வீடுகளில் அசரீரி ஒலி கேட்டது; அதுவே அருல்மிகு ஶ்ரீ மழை மாரியம்மன் உத்தரவு என்று மதித்து, கிராமத்தினர் ஒன்று சேர்ந்து ஒரு செங்கல்லை ஊரின் மேற்கில் வைத்து வழிபாடு நடத்தினர். அது சமயம் கார் மேகம் சூழ்ந்து கொண்டு ஶ்ரீ மழை மாரி மழையாய் உருவெடுத்து மக்களுக்கு அருள் வழங்கினாள். அன்று முதல் வருடந்தோறும் திருவிழா காணும் சமயங்களில் ஶ்ரீ மழை மாரி மழையாய் அருள் பொலிவது அம்மனின் சிறப்பம்சமாகும். ஶ்ரீ சக்தியின் அருள் வடிவமான ஶ்ரீ மழை மாரியம்மன் அனுகிரகத்தால் அம்மை கண்டவர்கள் மிக விரைவில் குணமடைந்தனர்.
ஷ 1975 தில் ஶ்ரீ மாரியம்மனுக்கு பெரும் பொருட்செலவில் ஆலயம் ஒன்று உருவாக்கி குடமுழக்கு விழா எடுத்து அம்மனுக்கு சிறப்பிக்கப்பட்டது; அன்று தொட்டு ஶ்ரீ மழை மாரியம்மனின் நல்லருளால் கிரமத்தில் அபரீத வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. அதைத் தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு கோவில் பிரகாரங்கள் மறு சீரமைப்புச் செய்து 1994 ஆம் ஆண்டு வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஶ்ரீ மழை மாரியம்மன் அனுக்கிரகத்தால் கிராமத்தில் உள்ள இளைய தலைமுறைகள் நல்ல கல்வி பெற்று பொருளாதார வசதியுடன் மிக சிறப்பக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு சான்று.
கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் முடிவடைந்ததால், கிராமத்தினர் ஆலயத்தை மறு சீரமைக்க முடிவெடுத்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு பழைய ஆலயத்தை இடித்தி விட்டு அதே இடத்தில் புதிதாக சற்று பெரிதாக ஆலயம் எழுப்பினர். இதனை ஜீர்ணோத்தாரண நூதாலயம் எந்றழைக்கப் படுகிறது. அதாவது பழைய ஆலையத்தை நீக்கி புதிதாகக் கட்டப்படுவது. தற்சமயம் கோவில் பணிகள் நிறைவுற்ற நிலையில், வருகின்ற 3ம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆலம்பள்ளம் கிராமத்தில் மழை மாரியம்மன், முத்து மாரியம்மன், காளியம்மன் மற்றும் பேச்சியம்மன் என நான்கு அவதாரங்களில் மக்களுக்கு அருள் வளகுகிறாள். கிராம மக்கள் வருடந்தோறும் சித்திரை வைகாசி மாதங்களில் திருவிழா நடத்தி அம்மனை வழிபடுவர். அச்சமயம் மக்கள் அம்மனுக்கு காவடி எடுத்தும் பொங்கல், கூழ் வைத்தும் சிறப்புறத் திரவிழாக் கொண்டாடுவர். முத்து மாரியம்மனுக்கு எட்டு நாட்களாகவும், மழை மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மனுக்கு பத்து நாட்களாகவும் திருவிழாக் காணப்படும். ஒன்பதாம் நாளன்று அம்மன் ஆலம்பள்ளம் வீதிகளில் பல்லக்கில் பவனி வருவதைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். அம்மன் திருவிழாவைக் காண சுற்றுப்புற கிராம மக்கள் அலை கடலெனத் திரண்டு வருவர். ஒவ்வொரு நாட்களும் கரை(பிரிவு) வாரியாக அம்மனுக்கு அபிசேகம் செய்து கிராம மக்கள் அனைவரும் அம்மனின் அருள் பெறுவர்.
அருள்மிகு முத்துமாரியம்மன்
அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பராமரிப்பு பணியை மறைந்த சோமசுந்தர வேளாளர் அவர்களின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
ஶ்ரீ அருள்மிகு காளியம்மன்
காளியம்மன் துதி:
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வரியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர்ரென்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!
அய்யனார் கோவில்
மேலும் கோவில்கள் பற்றிய செய்திகள் விரைவில்….